பொருளாதார ஸ்திரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ திட்டத்தில் தெரிவு மற்றும் பதிவுகளில் முறைகேடுகள் நிலவுவதாக தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல மாவட்டத்தில் மக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையுடன் வவுனியா மாவட்டத்திலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாத அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு காலம் முடிவடைந்த பின்னர் தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பதிவுகளை கிராம சேவையாளர் பிரிவின் அடிப்படையில் வவுனியா பிரதேச செயலக பிரிவிலுள்ள 42 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று தோணிக்கல், கூமாங்குளம், மூன்றுமுறிப்பு, வெளிக்குளம், கோவில்குளம் ஆகிய ஜந்து கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்களின் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் என்பன வவுனியா பிரதேச செயலகத்தில் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் ஒன்லைன் மூலம் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன.
இப் பதிவுகளை முன்னெடுப்பதற்காக 10க்கும் மேற்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளமையுடன் 300க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பயனாளிகள் தங்களது ஆட்சேபனைகளை முன்வைத்து தமது பதிவில் திருத்தங்களை மேற்கொண்டிருந்தனர்.