வவுனியாவில் இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாய்!!

2350

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இன்று (05.07.2023) காலை இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் மண்ணென்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குருநாகல் வரக்காபொல பகுதியில் வசித்து வரும் 34 வயதுடைய குறித்த பெண்ணிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் குடும்பத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் தந்தை அழைத்துச்சென்று இருவரும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த இரண்டு பிள்ளைகளின் தாய்க்கும் வன்னி இராணுவ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரருக்குமிடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. எனினும் சில வாரங்களாக குறித்த இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.



இதனால் விரக்தியடைந்த குறித்த குடும்பப் பெண் அவரைத் தேடி வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் குறித்த இராணுவ வீரரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப் பெண் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்ட சமயத்தில் வவுனியா பொலிஸாரினால் அவர் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குறித்த பெண்ணுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.