புதுமணத் தம்பதி தலையை முட்டிய சர்ச்சை.. உறவினர் கைது!!

739

கேரளாவில்..

போலீஸார், மணப்பெண்ணான சஜ்லாவிடம் வாக்குமூலம் பெற்றனர். அதைத் தொடர்ந்து, பெண்மையை அவமதித்ததாகவும், உடலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தொல்லை கொடுத்ததாகவும் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.



கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டு பல்லச்சனா பகுதியில் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற புதுமணப்பெண் சஜ்லாவின் தலையையும், அவரின் கணவர் சச்சினின் தலையையும், பாரம்பர்ய பழக்கம் என்ற பெயரில் ஒருவர் சேர்த்து முட்டவைத்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியது.

கடந்த திங்கள்கிழமை திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்குப் போனபோது, கணவரின் உறவினரான சுபாஷ் என்பவர் பின்னால் நின்றுகொண்டு, புதுமண தம்பதியின் தலைகளைப் பிடித்து ஒன்றோடு ஒன்று பலமாக மோதச் செய்தார்.

மகிழ்ச்சியாக புகுந்த வீட்டுக்குச் சென்ற சஜ்லா, தலையில் கடுமையான வலியுடன், கண்களில் கண்ணீர் பெருகிய நிலையில் நின்றார். மணமகன், மணமகளின் தலையை முட்டும் சம்பிரதாயம் கொல்லங்கோடு பகுதியில் இருந்துவருவதாகக் கூறப்பட்டது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்தது. மேலும் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி கொல்லங்கோடு போலீஸுக்கு மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

விளையாட்டாக மணமக்களின் தலையை லேசாக முட்ட வைக்கும் செயல் அந்தப் பகுதியில் நடப்பது வழக்கம் எனவும், இந்தச் சம்பவத்தில் மணமகளுக்கு வலியும், அதிருப்தியும் ஏற்பட்டதால் விவாதமானதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் போலீஸார் மணப்பெண்ணான சஜ்லாவிடம் வாக்குமூலம் பெற்றனர். அதைத் தொடர்ந்து, பெண்மையை அவமதித்ததாகவும், உடலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தொல்லை கொடுத்ததாகவும் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சஜ்லா கூறுகையில், “கணவர் வீட்டுக்குச் செல்லும் சடங்கின்போது அந்த வேதனையான நிகழ்வு நடந்தது. தலையை முட்டக்கூடாது என அங்கிருந்த என் தங்கை, கணவரின் தங்கையிடம் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே சொல்லி வைத்திருப்பதால் இடிக்கமாட்டார்கள் என நான் நினைத்தேன்.

ஆனால் அவர் திடீரென எங்கள் தலையை பிடித்து மோதிவிட்டார். சாதாரணமாக நான் பிறர் முன்னிலையில் அழமாட்டேன். ஆனால், அவர் தலையை பிடித்து மோதியபோது எங்கே நிற்கிறோம் என்ற உணர்வே சிறிது நேரம் இல்லாமல்போனது.

இல்லையென்றால் உடனே அவரை திட்டியிருப்பேன். இப்போதும் எனக்கு சிறிய அளவில் தலையில் வலி இருந்துகொண்டே இருக்கிறது. எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவரது உடலில் தொட்டு வலி ஏற்படுத்தினால் வருத்தமாகத்தான் இருக்கும்.

நான் சந்தோஷமாக கணவர் வீட்டுக்குள் போகவேண்டும் என நினைத்து வந்தேன். இந்தச் சம்பவத்தால் விளக்குடன் அழுதுகொண்டே புகுந்த வீட்டுக்குள் சென்றேன். அவர் இந்த சம்பவத்துக்கு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை.

எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் இனி இங்கு திருமணம் ஆகிவரும் வேறு பெண்களுக்கு ஏற்படக்கூடாது” என்றார். இதுகுறித்து சஜ்லாவின் கணவர் சச்சின் கூறுகையில், “எங்கள் பகுதில் தலையை மோதும் ஒரு சடங்கு உண்டு என அவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், நான் அப்படி எதுவும் கேள்விப்பட்டது இல்லை. லேசாக தலையை சேர்த்து வைத்துவிட்டு விட்டிருந்தால் பிரச்னை இருந்திருக்காது. தலையை பலமாக மோதியதால் வலியில் சஜ்லா அழுதுவிட்டாள்’’ என்கிறார்.