இரத்தினபுரியில்..
இரத்தினபுரி – இறக்குவானை, மாதம்பை பகுதியில் ஹோட்டல் அறையொன்றில் தூக்கில் தொங்கிய சடலமாக மீட்கப்பட்ட யுவதி, தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறக்குவானை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாதம்பை பகுதியிலுள்ள விடுதி அறை ஒன்றுக்கு இளைஞனும், குறித்த யுவதியும் சென்ற நிலையில் இளைஞன் வெளியில் சென்று மீண்டும் விடுதி அறைக்கு திரும்பிய நிலையில், அறை உள்பக்கமாக மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து கதவை திறக்க இளைஞன் முயற்சித்த போதும், அறையை திறக்க முடியாமையினால் விடுதி நிர்வாகத்திற்கு அறிவித்து விடுதி ஊழியர் ஒருவரின் உதவியுடன் யன்னல் வழியாக பார்த்த போது, யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, யன்னல் வழியாக உள்ளே சென்ற இளைஞன், யுவதியை மீட்டு கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், யுவதி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தமது பொறுப்பில் எடுக்கப்பட்ட 23 வயதான இளைஞன் மற்றும் ஹோட்டலில் பணிப் புரிந்த பெண் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
உடற் கூற்று பரிசோதனைகளுக்காக உடல் பாகங்கள் இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், முழுமையான விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னரே, உயிரிழப்புக்கான காரணத்தை வெளிப்படுத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.