வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் சமூர்த்தி , முதியோர் கொடுப்பனவுக்களுக்காக முதியவர்கள் உட்பட ஏனையோரை கடந்த மூன்று நாட்களாக அதிகாரிகள் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நெளுக்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் சமூர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் சமூர்த்தி அலுவலகர்களினால் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் எவ்வித முன்னாயத்தங்கள் மற்றும் சீரான ஒழுங்கமைப்பு இல்லாமல் மக்களை கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அழைத்து கொடுப்பனவுகளை வழங்குவதுடன் காலை 8.30 மணிக்கு சென்றால் மாலை 4.00 மணிக்கே கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதுடன் சில சமயங்களில் அடுத்த தினம் வருமாறும் பணிக்கின்றனர்.
இதனால் முதியோர்கள் உட்பட மக்கள் காலை சென்று ஒருநேர உணவுடன் ஒருநாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலமை காணப்படுவதுடன் சிலர் இரண்டு தினங்களும் அலைக்கழிய வேண்டிய நிலமையினை அதிகாரிகள் உருவாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இவ் கொடுப்பனவுகளை கிராம பிரிவுகளின் அடிப்படையில் அப்பகுதிகளிலுள்ள பொதுநோக்கு மண்டபங்களில் வழங்கியிருந்தால் இவ்வாறான நிலமை ஏற்பட்டிருக்காது எனவும் அதிகாரிகளின் அசமந்த போக்கே இவற்றிக்கு காரணம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் இவ்விடயத்திற்கு தொடர்பான அதிகாரியினை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,
வேப்பங்குளம் சமூர்த்தி வங்கியிலிருந்து பணத்தினை பெற்றே தாம் வழங்குவதாகும் அங்கு பதிவினை மேற்கொண்டு பணத்தினை பெற்று வருவதினாலேயே இந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் நெளுக்குளம் கிராம பிரிவிலுள்ள நான்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர்களையும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,
குறித்த பகுதி சமூர்த்தி உத்தியோகத்தர் தனிச்சையாக செயற்படுவதாகவும் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய சமூர்த்தி விடயங்கள் தொடர்பில் எமக்கு எவ்வித அறிவித்தல்களும் வழங்குவதில்லை மேலும் குறித்த அதிகாரியில் அசமந்த போக்கான செயற்பாட்டினால் பல தடவைகள் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மேலும் கடந்த மூன்று தினங்களாக சமூர்த்தி, முதியோர் கொடுப்பனவுக்களுக்காக மக்களை அலைக்கழிப்பது தொடர்பில் எம்மிடமும் பாதிக்கப்பட்ட மக்கள் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர் என தெரிவித்தனர்.