மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை தனி அறையில் அடைத்து வைத்து கணவர் செய்த கொடூரம்!!

746

ஆந்திராவில்..

ஆந்திராவில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் மனைவி கை விரல்களை உடைத்து தனி அறையில் அடைத்து உணவு வழங்காமல் சித்ரவதை செய்த ஊர்காவல் படையை சேர்ந்த வீரரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்காவல் படை வீரராக பணியாற்றிவருபவர் எஸ்.எம்.சந்த் பாஷா. இவருக்கும் பலமனேர் நகரைச் சேர்ந்த சபீஹா என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்ததால் சந்த்பாஷா மற்றும் அவரது பெற்றோர், சகோதரிகள் சபீஹாவை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனால் இரண்டு மூன்று முறை பெரியவர்களால் போலீசில் புகார் அளித்து, பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் முதல் சந்த்பாஷா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் இணைந்து சந்த்பாஷாவிற்கு வேறு திருமணம் செய்து வைப்பதாக கூறி வீட்டின் மேல் மாடியில் சபீஹாவின் கை விரலை உடைத்து அறையில் அடைத்து வைத்து சாப்பிட உணவு கூட வழங்காமல் இருந்துள்ளனர்.

இதனால் சபீஹா அந்த அறையில் உள்ள குளியல் அறையில் தண்ணீர் பிடித்து குடித்து உயிர் வாழ்ந்துள்ளார். இந்நிலையில் சபீஹா பல நாட்களாக வெளியே வராமல் இருந்ததால் அக்கம்பக்கத்து வீட்டோர் சபீஹாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சபீஹாவின் பெற்றோர் பலமனேர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து சந்த் பாஷா வீட்டிற்கு சென்று சபீஹாவை மீட்டு அவரிடம் நடந்த விவரங்களை கேட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.