அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள்.. மனைவியை தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த கணவன்!!

590

ஆந்திராவில் ..

நாகரீகமும், தொழில்நுட்பமும் எத்தனையோ வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும், சித்திரவதைகளும் குறையவே இல்லை. பெண்குழந்தைகள் பிறந்ததால் கணவனும், மாமியாரும் மனைவியின் விரல்களை உடைத்துதனி அறையில் வைத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திராவில் வசித்து வரும் சந்த்பாஷாவிற்கும் பலமனேர் நகரில் வசித்து வரும் சபீஹாவுக்கும் 2017ல் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் அடுத்தடுத்து இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள்.

தொடர்ந்து பெண் குழந்தைகளை பெற்றதால் சந்த்பாஷா மற்றும் அவரது பெற்றோர், சகோதரிகள் சபீஹாவை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினர். இதற்காக ஏற்கனவே 3 முறை போலீசில் புகார் அளித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் சந்த்பாஷா பெற்றோர் மற்றும் சகோதரிகள் இணைந்து ஆண் வாரிசு வேண்டி சந்த்பாஷாவிற்கு வேறு திருமணம் செய்து வைத்து விடுவோம் என மிரட்டி வருகின்றனர்.

அத்துடன் சபீஹாவை வீட்டின் மேல் மாடியில் கை விரலை உடைத்து தனி அறையில் அடைத்து வைத்து சாப்பாடு தராமல் சித்தரவதை செய்து வந்துள்ளனர். சபீஹா அந்த அறையில் உள்ள குளியல் அறையில் தண்ணீர் பிடித்து குடித்து உயிரை கையில் பிடித்தபடி வாழ்ந்து வந்தார்.

சபீஹா பல நாட்களாக வெளியே வராமல் இருந்ததால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது கணவர், மாமியாரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனையடுத்து சபீஹாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். சபீஹாவின் பெற்றோர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சென்று சபீஹாவை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சந்த் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.