இளம் தாயொருவர் 11 மாத பெண் குழந்தையுடன் மாயம் : அறையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!!

1837

அங்குருவத்தோட்டயில்..

அங்குருவத்தோட்ட, உரதுதாவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இளம் தாயும், அவரது 11 மாத பெண் குழந்தையும் காணாமல்போயுள்ளதாக அங்குருவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



உரதுதாவ பகுதியினை சேர்ந்த வாசனா குமாரி என்ற 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், அவரது 11 மாத மகளும் நேற்றுமுன்தினம் (18) முதல் காணாமல்போயுள்ளதாக கணவர் அங்குருவாதொட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல்போன பெண்ணின் கணவரின் மைத்துனரான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது பெண்ணின் வீட்டின் சமையலறைப் பகுதியில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கதவில் சில கறைகளும், தரையில் இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காணாமல்போன பெண்ணின் கணவன் தனது மைத்துனர் வீட்டிற்கு வந்துள்ளதாகவும், அவர் குறித்து சந்தேகம் உள்ளதாகவும் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், கணவர் இல்லாத நேரத்தில் மைத்துனர் வந்து செல்வது தொல்லையாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவி இரண்டு தடவைகள் தன்னிடம் கூறியதாகவும் அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது பொலிஸ் காவலில் உள்ள நபர் மூன்று பெண்களிடம் தகாத வார்த்தை பிரயோகம் செய்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளம் தாய் காணாமல்போனதையடுத்து, சந்தேகநபர் தனது மனைவியுடன் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக வந்த முச்சக்கர வண்டியை மோப்ப நாய் சுற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, இளம் தாய் மற்றும் 11 மாதகுழந்தை காணாமல்போனமை தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.