கரூரில்..
பூபேஸ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி காயத்ரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. வேலாயுதம்பாளையம் அருகே திருமணம் ஆன நான்கே ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த திருக்காடுதுறை பகுதியை சேர்ந்தவர் பூபேஸ்( 32). இவர் திருக்காடுதுறை நீரேற்று பாசன நிலையத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார் . இவரது மனைவி காயத்ரி(24).
இவர் திருக்காடுதுறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மிதுன் (3) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் பூபேஸ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி காயத்ரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தனது மனைவியின் பெற்றோர்களிடம் தங்க நகை வாங்கி வருமாறு அடிக்கடி வற்புறுத்தி உள்ளார். அதன் பெயரில் காயத்ரி தனது பெற்றோர்களிடம் சென்று தங்க நகை கேட்டு வந்துள்ளார்.
அதன் காரணமாக கடந்த நான்கு மாதத்திற்கு முன் 4 1/2 பவுன் தங்க செயின் கொடுத்துள்ளனர். மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் விரக்தியில் இருந்துள்ளார்.
பூபேஸ் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். அந்த நேரம் பார்த்து காயத்ரி வீட்டில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பூபேஸ் வெளியில் சென்று விட்டு வந்து கதவை திறந்து பார்த்தபோது காயத்ரி சேலையால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயத்ரியை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் காயத்ரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் இந்த சம்பவம் குறித்து காயத்திரியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காயத்ரியின் தாய் இளையம்மாள் காயத்ரியின் சகோதரர் சசிகுமார் மற்றும் அவரது உறவினர்கள் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தனர்.
இது குறித்து சசிகுமார் தனது சகோதரி காயத்ரியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காயத்ரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் திருமணம் நடந்து நான்கு ஆண்டுகளே ஆனதால் காயத்ரி வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கரூர் கோட்டாட்சியர் ரூபினா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
காயத்ரியன் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பூபேஷை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.