
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு 36 இந்திய மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் கங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் மீனவர்களின் 8 படகுகளும், அவர்களிடம் இருந்து கைபெற்றப்பட்ட வலைகள் மற்றும் உபகரணங்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட மீனவர்கள் மறுநாள் ஊர்காற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது மீனவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து உத்தியோக பூர்வமாக கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதன் படி யாழ். இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் நேற்று (11) காங்கேசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கடற்படையினருடைய உதவியுடன், சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டனர்.





