
ஐ.பி.எல் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தாலும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தி வருகிறார்.
கடந்த ஐ.பி.எல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் மீது குற்றம் சாட்டப்பட்டு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட இவருக்கு பிசிசிஐ தடைவிதித்தது.
கிரிக்கெட்டில் எந்த அளவு ஆர்வம் உள்ளதோ அதே அளவு நடனத்திலும் ஆர்வம் மிக்கவர் ஸ்ரீசாந்த். கிரிக்கெட் போனால் என்ன என்றவாறு நடனத்தில் இறங்கி கலக்க ஆரமித்தார்.
கிரிக்கெட் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தாலும் தனது முழுகவனத்தையும் நடனத்தின் மீது செலுத்த ஆரமித்துள்ளார்.
இவர் பிரபல இந்தித் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்று வரும் ஜலக் திக்கா ஜா என்ற நடனப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி வருகிறார்.
இதற்கு தனது மனைவி கொடுத்த உற்சாகம் தான் காரணம் என்கிறார் ஸ்ரீசாந்த். மேலும் அவர் இது பற்றி கூறுகையில், எதுவும் நம்மைத் தடுத்து விட முடியாது.
கிரிக்கெட் விளையாட்டை நான் இழந்துள்ளேன். வழக்கு முடியும் வரை பயிற்சியும் எடுக்க முடியாது. அதனால் டி.வி நிகழ்ச்சியில் ஆட வாய்ப்பு கிடைத்த போது, என்னை விட எனது குடும்பத்தாரும், நண்பர்களும்தான் என்னை சம்மதிக்க வைத்தனர்.
எனக்கு பிரேக் டான்ஸ் ஆடத் தெரியும். ஆனால் தொலைக்காட்சி மேடையில் ஆடுவது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. பல விதமான நடனங்களை இதில் ஆட வேண்டியுள்ளது. ஆனாலும், எனக்கு சிறந்த பயிற்சியாளர் கிடைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
நடனம் மட்டுமல்லாது நடிப்பிலும் களமிறங்கிய இவர் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள அன்புள்ள அழகே என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.





