தெலங்கானாவில்..
இந்திய மாநிலம் தெலங்கானாவில் அரசு அலுவலக கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் ஊழியர்கள் அச்சத்தில் ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.தெலங்கானா மாநிலத்தில் ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள பீர்பூர் நகர் அருகே வருவாய்த்துறை அலுவலகம் உள்ளது.
அங்கு, அலுவலகத்தில் உள்ள மேற்கூரை மிகவும் மோசமான நிலையிலும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து ஊழியர்கள் மீது விழும் நிலையில் இருக்கிறது.இதனால் அலுவலகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் எந்த நேரத்திலும் தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அலுவலக ஊழியர் ஒருவர் தப்பியோடியதை அடுத்து, அலுவலகத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுமாறு அலுவலக ஊழியர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த அலுவலகம் பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் அமைக்கப்பட்டு, உயர் அதிகாரிகளிடம் ஊழியர்கள் பலமுறை முறையிட்டும் இடமாற்றம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு அலுவலர்கள் ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில், “ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து வேலை செய்கிறார்கள். மேலும், கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விடலாம் என்ற அச்சத்தில் பொதுமக்களும் உள்ளனர்” என்பதை காட்டுகிறது.
கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், ஊழியர்கள் மட்டுமின்றி அலுவலகத்திற்கு வரும் கிராம மக்களும் அலுவலகத்திற்குள் செல்ல தயங்குகின்றனர்.சமீபத்தில் பெய்த கனமழையால் சுவர்கள் மற்றும் கூரைகள் ஈரமாகிவிட்டதால் பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.