தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் கொத்தடிமைகள் : அதிர்ச்சித் தகவல்!!

586

Lady

தமிழகத்தில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பெண் குழந்தைகள் கொத்தடிமைகளாக பணிபுரிவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலியில் சுமங்கலி திட்ட பிரச்னைகள் குறித்து குடிமை சமூக அமைப்புகளுடன் தொடர் கலந்தாய்வு கூட்டம் நடந்துள்ளது.
இந்த கூட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்துள்ளார்.

குழந்தைகள் நலக்குழுத் தலைவர் நளன் கலந்தாய்வின் நோக்கம் குறித்து பேசுகையில், சுமங்கலி திட்டம், இலவச விடுதி திட்டம், வேலை பழகுநர் திட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நெல்லை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பெண் குழந்தைகள் கொத்தடிமைகளாக பணிபுரிகின்றனர்.

பெண் குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்கவும், பள்ளி இடை விலகலை தடுக்கவும் பணிகள் மேற்கொள்ளப்படும். இரு மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மைய இயக்குநர் நம்பி பேசுகையில், இந்தியாவில் குழந்தைகள் யார் என்பது குறித்து தெளிவாக சொல்லப்படவில்லை. 18 வயதுக்கு கீழ் பணியாற்றும் அனைவரையும் குழந்தை தொழிலாளர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் வேலைக்காக கும்பல், கும்பலாக குழந்தைகள் இடம் பெயர்ந்து செல்கின்றனர்.

கொத்தடிமைகளாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்க விரைவில் இலவச தொலைபேசி எண் வழங்கப்படும்.

மேலும், அவர்களுக்கு சட்ட மற்றும் மனரீதியான ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும், வேலைக்காக நடக்கும் இடம் பெயர்வை பதிவேடு அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.