யாழில் குற்றச் செயலுடன் தொடர்புடைய கொள்ளைக் குழு உட்பட 161 பேர் கைது!!

575

A6

யாழில் பாரிய குற்றச் செயலுடன் தொடர்புடைய குழுவொன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து 28 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாவும் யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (13) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பல இடங்களில் நடைபெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த மாதம் அரியாலை பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த தங்க நகைளை கொள்ளையிட்டு சென்றிந்தனர்.

அது தொடர்பான புலன்விசாரணையின்போது சந்தேகநபர் ஒருவரின் கைரேகை அடையாளம் கிடைக்கப்பெற்றது அதனை கொண்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போதே குறித்த சந்தேகநபர் உட்பட ஆறு சந்தேகநபர்களை கைது செய்திருந்தோம்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் யாழில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் ஆவார். அவரே கொள்ளையிட்ட நகைகளை வாங்கி வந்துள்ளார்.

அவர்களிடம் இருந்து இதுவரை ஒரு கொலை குற்றம் உட்பட 8 பாரிய குற்றங்கள் தொடர்பான தகவல்களும் 6 வீடு உடைப்பு தொடர்பான தகவலுக்கும் கிடைத்துள்ளன. அத்துடன் அவர்களிடம் இருந்து இதுவரை 28 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். இக் குழுவினரை கைது செய்யப்பட்ட பின்னர் யாழ் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் கொள்ளை சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் சந்தேகத்தின் பெயரில் 58 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 22 பேரும், களவு தொடர்பில் 10 பேரும், மற்றும் பிற குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என இந்தவாரம் யாழ். பிராந்திய பொலிஸ் பிரிவில் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.