
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள் இருவர் மாயமான மலேசிய விமானம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
மார்ச் மாதம் 8ம் திகதி கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 ரக விமானம் நடுவானில் மாயமாகி போனது.
இதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. எனினும் விமான தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் மாயமான விமானம் குறித்து நியூசிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள் ஈவான் வில்சன் மற்றும் ஜெப் டெய்லர் இருவரும் மாயமான விமானம் குறித்து தங்களது சமீபத்திய புத்தகத்தில் தெரிவித்துள்ள கருத்தில், விமானம் விபத்தில் சிக்கவில்லை, அது முன்பே திட்டமிடப்பட்டு, சரியாக கணிக்கப்பட்டு நடத்தப்பட்டு உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குட் நைட் மலேசியன் 370 தி ட்ரூத் பிஹைண்ட் தி லொஸ் ஒப் பிளைட் 370 என்ற பெயரிடப்பட்ட இந்த புத்தகத்தில் மாயமான விமானம் குறித்து அதன் பின்னணியில் உள்ள உண்மையை தெரியப்படுத்த ஒரு முறையை கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெய்லர் கூறுகையில், அது முன்பே திட்டமிடப்பட்டு, நடத்தப்பட்டுள்ளது . அது மீண்டும் நடைபெற அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும், விமானம் குறித்து விரிவாக அலசி ஆராய்ந்து அது குறித்த முடிவை முதன்முறையாக நாங்கள் வெளியிடுகிறோம். விமானம் பயணித்த பாதை, இந்திய பெருங்கடலில் விமானம் மூழ்குவதற்கு பொறுப்பாளி யார் என நாங்கள் நம்புகிறோம் ஆகியவற்றை நாங்கள் வெளியிடுகிறோம் என்றும் வில்சன் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்ட விமான தேடுதல் வேட்டையில் ஈடுபட சீனாவின் ராணுவ கப்பல் மற்றும் நெதர்லாந்து நாட்டின் சர்வே கப்பல் ஆகியவை முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் விமானம் குறித்த இந்த புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.





