மோடியின் பெயரில் நடைபெற்ற பல லட்சம் மோசடி!!

582

Modi

ஈரோட்டில் பிரதமர் நரேந்திர மோடி பெயரில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்துள்ளதாக பாஜகவினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

ஈரோடு பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், சென்னை, வில்லிவாக்கம் இரண்டாவது தெரு, எண், 44.ஏ ராஜமங்கலம் என்ற முகவரியை தலைமை இடமாக கொண்டு, ஆட்வின் பெண்கள் சங்கம் என்ற அமைப்பு பெண்கள் நலனுக்காக செயல்படுவதாக கூறப்படுகின்றது.

மேலும் ஈரோடு நேருவீதியில் இதன் கிளை செயல்பட்டு வருகின்றது. இது இந்திய முன்னேற்ற மோடி பேரவையின் சகோதர அமைப்பு என்று கூறப்படுகிறது. இங்கு பெண்கள் செய்யும் தொழிலுக்கு பிரதமர் மோடி மூலம் கடன் பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து வருகின்றனர்.

அதாவது 50,000 கடன் பெற 350 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ஒரு லட்சம் கடன் வேண்டுவோர் 1,000 செலுத்த வேண்டும் எனவும் கூறி உரிய பற்றுச் சீட்டு எதுவும் இல்லாமல் வசூல் செய்து வருகின்றனர்.

ஒரு மாதத்தில் கடன் பெற்று தருவதாக கூறி பணத்தை வசூல் செய்யும் இவர்கள் ஈரோடு கருங்கல்பாளையம், பவானி, சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் ஏராளமான பெண்களிடம், ஏராளமான தொகை வசூலித்துள்ளனர்.

எனவே, மோடி பெயரை தவறாக பயன்படுத்தி ஏழை பெண்களிடம் பணம் பறிப்பதோடு மட்டுமல்லாமல் பிரதமரின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகவும் இது உள்ளது. இது போன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட பொலிசார், இது குறித்து விசாரணை நடத்தி உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.