1700 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்!!

780

Terror

ஈராக்கில் ஷியா பிரிவினரின் தலைமையிலான அரசுக்கு எதிராக சன்னி பிரிவு தீவிரவாதிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்துடன் போரிடும் அவர்கள் மொசூல், திக்ரித், கிர்குக் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை பிடித்து விட்டனர்.

தலைநகர் பாக்தாத்தை நெருங்கி வருகின்றனர். தீவிரவாதிகளின் முன்னேற்றத்தை தடுக்க அமெரிக்க விமானம் தாங்கிய போர்கப்பலை ஈராக்குக்கு அனுப்பியுள்ளது.

போரின் போது ராணுவ வீரர்கள் பலரை தீவிரவாதிகள் பிடித்து சென்றனர். அவர்களை பணய கைதிகளாக வைத்திருந்தனர். அவர்களில் 1700 பேரை சுட்டுக் கொன்று விட்டதாக தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.

அவர்களது வேலயத் சலாஹூதீன் இணையத் தளத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும், ராணுவ வீரர்களை வரிசையாக குனிய வைத்து துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக் கொல்வது போன்ற போட்டோக்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

சலாஹூத்தீன் மாகாணத்தில் ஒரு மறைவிடத்தில் வைத்து கொலைகள் அரங்கேற்றப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் பெரிய அளவில் மொத்தமாக இறுதிச் சடங்குகள் நடந்ததாக தகவல்கள் எதுவும் இல்லை.

எனவே, இது நடந்தது உண்மையா என உறுதிப்படுத்த முடியவில்லை. ஒருவேளை கொலை சம்பவம் வேறு பகுதியில் நடந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சன்னி தீவிரவாதிகளுக்கு எதிராக போராட ஷியா பிரிவினரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என மதகுரு அயாதுல்லா அலின அல்– சிஸ்தானி நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று ஏராளமானவர்கள் திரண்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். ஈராக் மட்டுமின்றி சிரியாவிலும் சன்னி பிரிவு தீவிரவாதிகளின் அட்டூழியம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டமாஸ்கல் புறநகரில் விஷ குண்டுகளை வீசி 1400 பேரை கொன்று குவித்தனர்.