இதயம் இடம் மாறிய திக் திக் 13 நிமிடங்கள் : நெஞ்சை நெகிழச் செய்த ஒரு சம்பவம்!!

542

மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு, மூளைச்சாவு ஏற்பட்ட தமிழக இளைஞரின் இதயத்தை மருத்துவர்கள் பொருத்த தொடங்கியுள்ளனர்.

மும்பையை சேர்ந்த கேப்டன் அஸ்பி பி மினோசெர்ஹோஜி, கடற்படையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி அர்மைடி, இவர்களுடைய மகள் அவோவிக்கு நான்கு ஆண்டுகளாக இதய நோய் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இவருக்கு நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், ஆறு மாதங்களுக்குள் மாற்று இதயம் பொருத்தாவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து சென்னையில் உடல் உறுப்பு தானம் அதிக அளவில் நடக்கும் செய்தியறிந்து தனியார் மருத்துவமனையில் மும்பை இளம்பெண் அவோவியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்த நேரத்தில் செங்கல்பட்டில் விபத்தில் படுகாயமடைந்த லோகநாதனுக்கு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்டது தெரியவந்தது.

அவரது இதயத்தை மாற்று இதயமாக வழங்க அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்கு லோகநாதனின் தாயார் முழு ஒத்துழைப்பு தந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, இரு மருத்துவமனைகளின் மருத்துவர்களும் ஆலோசனை செய்து உரிய நேரத்துக்குள் அறுவைச் சிகிச்சை செய்து லோகநாதனின் இதயத்தை அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

அறுவைச் சிகிச்சை செய்த இதயத்தை சாலை மார்க்கமாக அம்புலன்ஸில் விரைந்து எடுத்துச்செல்ல பொலிஸாரும் ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர்.

அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அம்புலன்ஸ், 11 சிக்னல்களையும், வழியில் இருந்த 6 வேகத்தடைகளையும் கடந்து தனியார் மருத்துவமனையை அடைந்தது.

இந்த வழித்தடத்தின் தூரமான 11கி.மீயை கடக்க எடுத்துக்கொண்ட நேரம் 13 நிமிடங்கள், 22 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாலை 6.44 மணிக்கு புறப்பட்ட அம்புலன்ஸ் சரியாக 6.57 மணிக்கு அடையாறு மருத்துவமனையை வந்தடைந்தது.

போக்குவரத்தில் மாற்றம் செய்ததை பார்த்த பொது மக்கள் யாரோ முக்கியத் தலைவர்கள் வரப்போகிறார்கள் என்று நினைத்தனர்.

பின்னர் அம்புலன்ஸ் செல்வதற்காகத்தான் காவல்துறையினர் இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதை அறிந்து பெரிதும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பயணத்தை சென்னை காவல் ஆணையர் ஜோர்ஜ், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கருணாசாகர் மற்றும் உயர் அதிகாரிகள் தங்கள் அறையில் இருந்து காணொளி காட்சிகள் மூலம் பார்வையிட்டுள்ளனர்.

H H1 H3