தமிழகத்தில்..
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து மாணவிகள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். எத்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் மன அழுத்தத்தில் விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.
இதனால் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களின் சிரமங்களை யோசிப்பதே கிடையாது. நீட் தேர்வில் மதிப்பெண் குறைவால் ஓராண்டு போராடி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், வேலஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் மணிவேல் மகள் ஜெயசுதா . இவருக்கு வயது 18. இவர் 2022ல் நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றார்.
இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. செப்டம்பர் 8ம் தேதி ஜெயசுதா கழிப்பறை சுத்தம் செய்யும் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
6 மாதத்திற்கு முன்பு சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயசுதா உயிரிழந்தார்.
ஒரு வருடமாக உயிரை காக்க போராடி உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.