திருகோணமலையில்..
திருகோணமலையில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்றையதினம் (01-09-2023) காலை 11.30 மணியில் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மூதூர் – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான சுந்தரலிங்கம் சுந்தரவதனன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உழவு வேலைக்காக பாரதிபுரம் பகுதியில் இருந்து கிளிவெட்டி – தங்கநகர் நோக்கிச் சென்றபோது தங்கநகர் பகுதியில் வைத்து உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்காலினுள் விழுந்ததால் குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது.
இதன்போது உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்த 3 பிள்ளையின் தந்தையான குறித்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் அருகில் இருந்த நபர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.