வவுனியாவில் பொதுமுடக்கம் : பல சேவைகள் ஸ்தம்பிதம்!!

1075

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்ப்பட முடியாத நிலமைக்கு எதிர்ப்புதெரிவித்தும், வடக்கு கிழக்கில் முன்னெடுக்குப்பட்டும் பௌத்த மயமாக்கல், செயற்பாடுகளிற்கு கண்டனம் தெரிவித்தும் வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் கர்த்தால் போராட்டத்திற்கு வவுனியாவில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது.

அந்தவகையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிககுறைவாக காணப்பட்டது.

இதேவேளை அரச பேருந்துச்சேவைகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், தனியார் பேருந்துச்சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது. இதேவேளை பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்றுவருகின்றமையால் கல்விச் செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றிருந்தது.

வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இன்மையால் நகரத்தின் இயல்பான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது. இதேவேளை நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து சட்டத்தரணிகளும் விலகியிருந்தனர்.

மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளான நெடுங்கேணி, செட்டிகுளம், கனகராயன்குளம் உட்பட ஏனைய உப நகரங்களின் வழமையான செயற்ப்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன்,வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், முஸ்லீம் மக்கள், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.