
வவுனியாவில் நேற்று ( 20.06) அளுத்கம அப்பாவி முஸ்லிம் மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் வவுனியா மாவட்ட பொலீஸ் உயர் அதிகாரிகள் நடந்து கொண்ட முறையானது நாட்டில் ஜனநாயகமும், நீதியும் இருக்கின்றதா என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளதுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் பொலீஸ் நடந்து கொண்ட முறையினை வன்மையாக கண்டிப்பதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் என்.பிரதீபன் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், பொதுபல சேனாவுக்கு எதிராக எதுவித நடவடிக்கையையும் முன்னெடுக்காத பொலிஸார் அளுத்கம சம்பவத்தில் ஈடுப்பட்ட காடையர்களை பாதுகாப்பதுடன் அவர்களை கைது செய்ய மறுப்பதுடன் அவர்களை பாதுகாக்கவும் செய்கிறது. இவர்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய சக்திகள் பொதுபல சேனாவை பாதுகாத்து வருவதையும் எம் கண் முன் நடந்தே வருகிறது.
எனவே பொதுபல சேனாவின் அட்டூளியங்கள் எதிர்வரும் காலங்களிலும் தொடரவே செய்யும். எனவே அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மலையகத் தமிழர்கள் ஓரணியில் நின்று போராட முன்வரவேண்டும் எனவும் அவ்வாறு செய்யத்தவறினால் சிறுபான்மை இனங்கள் அழிவுக்கு நாமே வழி அமைத்து கொடுத்தவர்கள் ஆகிவிடுவோம் என்பதையும் தெரிவித்ததுடன், அளுத்கம சம்பவத்தையும் அதற்கு ஆதரவாக நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தை குழப்பியடித்த பொலிஸாரையும் வன்மையாக கண்டிப்பதாக கூறினர்.





