யாழில் வாள் வீச்சில் உயிரிழந்த மாணவனின் சகோதரர்கள் கைது!!

597

A6

யாழ். கோண்டாவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சில் உயிரிழந்த மாணவனின் இரு சகோதரர்கள் இன்று (23) காலை கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரும்பிராய் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை அடித்து காயம் ஏற்படுத்தியமை தொடர்பாகவே ரவீந்திரன் செந்தூரன், ரவீந்திரன் சாரங்கன் என்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்து கடந்த திங்கட்கிழமை இரவு 6.30 மணியளவில் இளைஞர் குழு ஒன்று வாளினால் வெட்டியதில், வீட்டில் இருந்த மாணவானான ரவீந்திரன் சுகிர்தன் (19) என்பவர் உயிரிழந்ததுடன் அவரது சகோதரனான செந்தூரன் மற்றும் சகோதரியான லக்சனா ஆகியோர் காயமடைந்தனர்.

இவ் வாள் வெட்டு சம்பவத்திற்கு காரணமாக அமைந்தது என தெரிவிக்கப்பட்ட சம்பவமானது,

உயிரிழந்த மாணவனான சுகிர்தன் வீட்டுக்கு அருகாமையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர்கள் சிலர் அவரை காலால் எட்டி உதைந்து விட்டு சென்றனர்.

அதனை கண்ணுற்ற உயிரிழந்தவரின் சகோதரர்கள் இருவர் (இன்று கைது செய்யப்பட்டவர்கள்) உட்பட சில இளைஞர்கள் குறித்த இளைஞர் குழுவை கலைத்து சென்று அதில் இருவரை பிடித்து நயப்புடைத்தனர்.

அதில் உரும்பிராய் பகுதியை சேர்ந்த ரொபின்ராஜ் மற்றும் நிரோஜன் என்பவர்கள் காயமடைந்தனர். அதனை அடுத்தே காயமடைந்தவர்களின் நண்பர்கள் கோண்டாவிலில் உள்ள சுகிர்தன் வீட்டுக்குள் புகுந்து வாளினால் வெட்டியதிலேயே சுகிர்தன் உயிரிழந்ததுடன் அவரது சகோதரன் மற்றும் சகோதரி காயமடைந்தனர்.

இச் சம்பவத்தை அடுத்து கோண்டாவிலில் உள்ள சுகிர்தனின் உறவினர்கள் நண்பர்கள் உரும்பிராய் பகுதிக்கு சென்று தாக்குதலை மேற்கொண்டதில் உரும்பிராய் பகுதியில் 7 வீடுகள் சேதமடைந்தன.

இத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து கடந்த தினங்களில் கோண்டாவில் உரும்பிராய் பகுதிகளில் பதட்டமான சூழல் காணப்பட்டதுடன் இரு பகுதிகளிலும் பெருமளவான பொலிசார் இராணுவத்தினர் காவலில் ஈடுப்பட்டிருந்தனர்.

நேற்றைய தினமே பொலிசாரும் இராணுவத்தினரும் அவ்விடங்களில் இருந்து விலகி சென்றனர். இந் நிலையில் இன்று காலை உயிழந்தவரின் இரு சகோதர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் ஏற்கனவே பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

620-100 Final