இளம் பெண் வெட்டிக்கொலை… முகமூடி நபர்கள் வெறிச்செயல்!!

726

அம்பத்தூரில்..

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி நந்தினி (27). பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் சதீஷ் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் நந்தினியின் உறவினரான மதன் என்பவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று மாலை நந்தினி, அம்பத்தூர் தொழிற்பேட்டையை அடுத்த ஐ.சி.எப்.காலனிக்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென நந்தினியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியுள்ளார்கள். இதில் படுகாயம் அடைந்த நந்தினி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அந்த கும்பல் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார், நந்தினி உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பாலாஜி கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் அவரது கூட்டாளிகள் சதீஷின் மனைவியான நந்தினியை வெட்டிக்கொன்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முகமூடி கும்பலை தேடி வருகிறார்கள். உறவினர் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த இளம்பெண் அம்பத்தூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.