
கூலிக்காரன், காக்க காக்க, கந்தசாமி, துப்பாக்கி உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, விக்ரம் பிரபுவை வைத்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் அரிமாநம்பி.
இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குரனாக பணிபுரிந்த ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். டிரம்ஸ் சிவமணி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளாராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தை வருகிற ஜுலை 4ம் திகதி உலகமெங்கும் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு நகரத்தில் வசிக்கும் இளைஞராக வருகிறார்.
இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிக்காக விக்ரம் பிரபுவை வடசென்னை முழுவதும் ஓடவிட்டு படமாக்கியுள்ளனர். அதேபோல், பாங்கொக்கில் மலைப்பகுதியில் இதுவரை சினிமாவில் யாரும் படம்பிடிக்காத அருவியொன்றில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.
இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ள தணிக்கை குழுவினர், அனைவரும் ரசித்து பார்க்கக்கூடிய படமாக எடுத்ததற்கு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளிவரவிருக்கும் இப்படத்தை சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக கலைஞர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





