சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தேன் : சென்னை கட்டட இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்த நபரின் சோகக் கதை!!

610

Chennai

சென்னை கட்டிட விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் 3 நாட்களாக சிறுநீரை குடித்து உயிர்வாழ்ந்ததாக கூறியுள்ளார்.

ஒடிசா மாநிலம் கேந்திரபாலா அருகேயுள்ள ராஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்குமார் ராவ்(25). இவர் போரூரில் விபத்து நடந்த கட்டிடத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

விபத்து நடந்த போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி மண்ணில் புதைந்த அவர், 72 மணி நேரத்திற்கு பிறகு அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார். தற்போது போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரகாஷ்குமார் ராவ் கூறியதாவது,

கட்டிட விபத்து ஏற்பட்டபோது, நான் கட்டிடத்தின் உள்ளே வேலை செய்து கொண்டு இருந்தேன். கட்டிடம் சரிந்த நிலையில் நான் இருந்த அறையில் உள்ள ஒரு சிலாப்பில் உட்கார்ந்த நிலையில் மாட்டிக் கொண்டேன். இருட்டை தவிர வேறு எதுவும் என் கண்ணில் தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் உதவிக்காக காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூப்பிட்டபடியே இருந்தேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனது வயிறு பசித்தது. நாக்கு உலர்ந்தது. ஆனால் உணவுக்கு வழியில்லை. தொண்டை காய்ந்து வரண்டு போன நிலையில் எனது சிறுநீரை நானே குடித்தேன்.

உயிர் பிழைப்பேன் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை. நான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அது கடவுள் செய்த அதிசயம். இது எனக்கு மறுபிறவி.

உள்ளே இருந்த சமயத்தில் மேலே இருந்து மீட்புபணிகள் நடைபெற்றதை நான் நன்றாகவே உணர்ந்தேன். எனக்கு இது மறுபிறவி என்பதால் என்னுடைய கண்கள் இரண்டையும் தானம் செய்ய முடிவெடுத்துள்ளேன். என்னுடைய 2 கண்களும் நான் இறந்தபிறகு மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.