
நடிகை அஞ்சலி மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.
ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து படிப்பிடிப்பில் பங்கேற்றார். 2 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் களஞ்சியம் மற்றும் தனது சித்தி பார்வதி மீது குற்றச்சாட்டுகள் கூறி சென்னையை விட்டு வெளியேறினார். ஐதராபாத்தில் தங்கினார்.
தமிழ் படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்தார். இயக்குனர் களஞ்சியம் தனது ஊர் சுற்றி புராணம் படத்தை முடித்துக் கொடுக்காமல் அஞ்சலி வேறு படங்களில் நடிக்க கூடாது என்றும் மீறி நடித்தால் நீதிமன்றம் போவேன் என்றும் எச்சரித்தார். களஞ்சியத்தின் எதிர்ப்பை மீறி இன்று சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அஞ்சலி கலந்து கொண்டார்.
சாலிகிராமத்தில் உள்ள ஸ்டூடியோவில் ஜெயம் ரவியும், அஞ்சலியும் இணைந்து நடித்த காட்சிகளை இயக்குனர் சுராஜ் படமாக்கினார். பின்னர் அஞ்சலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவத..
தமிழ் படத்தில் 2 வருடங்களுக்கு பிறகு நடிக்கிறேன். இயக்குனர் சுராஜ் சொன்ன கதை பிடித்தது. எனக்கு கரக்டர் சிறப்பாக இருந்தது. காமெடி வேடத்தில் வருகிறேன். என்னைப்பற்றி நிறைய வதந்திகள் வெளிவந்தன. எனக்கு திருமணம் நடந்து விட்டது என்றும் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறேன் என்றும் செய்திகள் வெளியானது. நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. எனக்கு திருமணம் நடக்க வில்லை. தீராத வியாதியும் இல்லை.
இயக்குனர் களஞ்சியம் பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே அவர் சம்பந்தமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன். தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். எனக்கு மிரட்டல்கள் எதுவும் வரவில்லை. இங்கு சுமூகமாகத்தான் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. இதை நேரிலேயே நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அஞ்சலி கூறினார்.
களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்ட போது, அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னது தானே பிரச்சினையாக உள்ளது என்றார்.





