மோதிரம் மூலம் சிதைந்து கிடந்த தங்கையை கண்டுபிடித்த சகோதரி : நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம்!!

536

Ring

சென்னை கட்டிட விபத்தில் உருக்குலைந்த கிடந்த உடல்களில் மோதிரம் மூலம் தனது தங்கையை சகோதரி ஒருவர் அடையாளம் கண்டுபிடித்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் இருந்து 18 பேர் சென்னை கட்டிட பணிக்கு வந்துள்ளனர்.

இவர்களில் கட்டிட விபத்தில் சிக்கிய 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்களில் திருமணமாகாத ரோஜா (20) என்ற பெண்ணையும் காணவில்லை.

இந்த விபத்தில் உயிர் தப்பிய ரமாதேவியும், அவரது கணவர் ஆதிநாராயணன் என்பவரும் கடந்த 5 நாட்களாக ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே காத்து கிடந்தனர். தினமும் வரும் அடையாளம் தெரியாத பெண் உடலை இவர்களுக்கு மருத்துவ குழுவினர் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சிதைந்த நிலையில் இருந்த ஒரு பெண் உடலை பார்த்து, ரமாதேவி நேற்று அழுது கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த உடலில் இருந்த உடமைகளை உற்று நோக்கி பார்த்தபோது, தனது தங்கை இல்லை என்ற முடிவுக்கு வந்தார். தனது தங்கை உயிரோடு இருக்கிறாரா, செத்துவிட்டாரா என்று கதறி கொண்டே வெளியே வர முயன்ற போது, திடீரென அவர் தனது தங்கைக்கு வழங்கிய மோதிரம் ஞாபகத்துக்கு வந்துள்ளது.

உடனே அந்த உடலில் இருந்த கையை தூக்கி விரலை பார்த்த போது அந்த மோதிரம் அப்படியே இருந்தது. தனது தங்கை தான் என கதறி அழுததை பார்த்த போது அங்கிருந்த மருத்துவ குழுவினருக்கும் கண்ணீரை வரவழைத்தது.

அழுகையுடன் ரமாதேவி கூறுகையில், எனது தங்கை உயிரோடு வந்து விடுவாள் என்று நம்பியிருந்தேன்.

அவளை அடையாளம் கூட காட்ட முடியாத நிலையில் சிதைந்த நிலையில் இறந்து விட்டாள் என்றும் நான் கொடுத்த மோதிரம் இல்லாவிட்டால் ரோஜாவை யார் என்றே தெரியாமல் போயிருக்கும் எனவும் கதறி அழுதுள்ளார்.