
பிரபல நகைச்சவை நடிகர் பாலாஜி நேற்று திருப்பூர் நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கு தொடர்பாக சரண் அடைந்துள்ளார்.
திருப்பூரில் நகர வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரம்பும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வரும் நிறுவன கிளை மேலாளர் சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பரமசிவம், பிரபு, மணிகண்டன், ராஜசேகர் ஆகியோர் கடந்த 2011ம் ஆண்டு முதல் சுமார் 2 கோடியே 2 லட்சத்தை சேர்ந்து கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் பரதன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு பொலிசார் நடத்திய விசாரணையில், பணத்தை கையாடல் செய்ததும், அந்த பணத்தில் ஒரு பகுதியை திருப்பூரைச் சேர்ந்த விஷ்ணுவர்த்தன் என்பவரிடம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து விஷ்ணுவர்த்தனை விசாரித்தபோது 20 லட்சத்தை கலை இரவு நிகழ்ச்சி நடத்துவதற்காக நடிகர் பாலாஜியிடம் முன்பணமாக கொடுத்ததாகவும், ஆனால் நிகழ்ச்சியை நடத்தாததோடு அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து 6 பேரையும் கைது செய்த பொலிஸ், விஷ்ணுவர்த்தன் அளித்த வாக்குமூலத்தால் நடிகர் பாலாஜியிடம் விசாரணை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் பாலாஜி இந்த வழக்கு தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார்.
மேலும் நீதிமன்ற உத்தரவுபடி நேற்று காலை திருப்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவருக்கு தற்போது நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





