முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 75 ஓட்டங்களால் வெற்றி!!

481

D

இலங்கை அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்க அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணியுடன் இன்று தனது முதல் ஒரு நாள் போட்டியில் மோதியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி 5 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்கள் குவித்துள்ளது.

ஹசிம் அம்லா அதிகபட்சமாக 109 ஓட்டங்களும், டி வில்லியர்ஸ் 75 ஓட்டங்களும் குவித்தனர். இலங்கை அணியில் மென்டிஸ் 61 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 305 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

குசல் பெரேரா 34 ஓட்டங்களையும் , டில்ஷான் 40 ஓட்டங்களையும் பெற்று நல்ல தொடக்கம் கொடுத்தனர். பின் களமிறங்கிய சங்கக்காரா சிறப்பாக விளையாடி 88 ஓட்டங்கள் குவித்தார்.

அதன் பின்னர் ஜெயவர்தனா 10 ஓட்டங்களில் வெளியேற அடுத்து விளையாடி அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அதனால் இலங்கை அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.

இலங்கை அணி தனது இறுதி 5 விக்கட்டுகளையும் 13 ஓட்டங்களுக்கு இழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக ஹசிம் அம்லா தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 9ம் திகதி நடைபெறவுள்ளது.