சொந்த மண்ணில் படுதோல்வியடைந்த பிரேசில் : 7-1 என சாதனை வெற்றியுடன் இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி!!

470

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில் ஜெர்மனி, பிரேசிலை 7-1 எனும் கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இடைவேளை நேரத்தில் ஜெர்மனி 5-0 எனும் கணக்கில் முன்னணியில் இருந்தது. தொடர்ச்சியாக ஜெர்மனி கோல் அடித்து ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்க, அதிச்சியில் உறைந்து போயினர் பிரேசில் அணியினர்.

எந்தவொரு உலகக் கிண்ண போட்டியிலும் இவ்வகையிலான ஒரு தோல்வி ஏற்பட்டதில்லை. இந்த முதல் அரையிறுதி போட்டியில் பிரேசில் அணி சோதனை மேல் சோதனையை சந்தித்தது.

போட்டியின் துவக்கம் முதலே ஜெர்மனி ஆளுமை செலுத்தி வந்தது. அவர்களின் அதிரடி ஆட்டத்தை பிரேசில் அணியால் எதிர்கொள்ள முடியவில்லை.

பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மாரும், தலைவர் தியாகோ சில்வாவும் இன்றைய போட்டியில் ஆட முடியாதது பிரேசிலுக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. போட்டியின் கடைசி நிமிடத்தில் பிரேசில் ஒரு கோல் அடிக்க அணியின் மானம் சிறிது காப்பாற்றப்பட்டது.

பல மில்லியன் டொலர்கள் செலவில், பெரிய சவால்களுக்கு இடையே இந்தப் போட்டியை நடத்திய பிரேசில் இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்துள்ளதை அடுத்து, தேசமே சோகத்தில் ஆழ்ந்துவிடும் என்று வர்ணனையாளர்கள் கூறுகிறார்கள்.

பெலோ ஹரிசாண்டேயில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அரங்கு முழுவதும் ரசிகர்கள் குழுமியிருந்த நிலையில், அது பிரேசிலுக்கு பெரிய ஆதரவாக இருக்கும் என்று போட்டிக்கு முன்னர் கருதப்பட்டது.

எனினும் இவ்வளவு பெரிய தோல்வியை அந்த அணி அடைந்திருந்தாலும், போட்டிக்கு பிறகு பிரேசிலின் பயிற்சியாளர் லூயி ஃபெலிப்பே ஸ்கொலாரி, மைதானத்துக்கு சென்று ஜெர்மனி அணியின் வீரர்களை பாராட்டியது மிகவும் கண்ணியமான ஒரு செயலாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள ஜெர்மனி, இன்று (09.07) நெதர்லாந்து- ஆஜெண்டினா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றிபெரும் அணியை எதிர்த்து இறுதி போட்டியில் விளையாடவுள்ளது.

G1 G2 G3