திரைப்படங்களில் மலக்குடல்களில் தங்கம், வைரம் கடத்தல் சீன்கள் காட்டப்படும். அவை எல்லாம் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படி நடப்பதால் தான் திரையிலும் காட்டப்படுகிறது என்பதை உணர்த்தும் வகையில் அடிக்கடி இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் ஓமன், மஸ்கட்டிலிருந்து, கேரளாவின் கண்ணூருக்கு செல்லும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, சர்வதேச விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்டதில் விமான பணியாளரான கொல்கத்தாவைச் சேர்ந்த சுரபி கதுன் என்ற பெண், அவரின் மலக்குடலில் 960 கிராம் அளவிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்திருந்தார்.
தொடர்ந்து, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பெண் ஏற்கனவே பலமுறை இதுபோன்று தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கொச்சி விமான நிலையத்தில் தோஹாவில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரிடம் 560 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.