720-க்கு 720… நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற தமிழக மாணவன்!!

243

நீட் தேர்வில் 720-க்கு 720 என முழு மதிப்பெண்களை பெற்று விழுப்புரம் மாணவன் சாதனை படைத்துள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியான நிலையில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்த ரஜநீஷ், விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியை சார்ந்த ரெயில்வே அதிகாரியான பிரபாகரன், கல்லூரி பேராசிரியை விமலாதேவி தம்பதியின் மகன் ரஜநீஷ்.



நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்த அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் இனிப்புகள் ஊட்டி பாராட்டினர்.

சிறுவயதிலிருந்து மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த ரஜநீஷ் 10ஆம் வகுப்பில் 482 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்தார்.

“நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நீட்தேர்விற்கு சிறப்பு வகுப்புகளில் பயிற்சி பெற்று முழு மதிப்பெண்ணை பெற்றேன். டெல்லியில் உள்ள எய்ம்சில் பயின்று, இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஆக வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு.

இதற்காக அதிகமாக பயிற்சி மேற்கொண்டதில், அதற்கான பலன் கிடைத்துள்ளது. டெஸ்ட் அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்.

மேலும், தாய் விமலா தேவி, தொடர்ந்து உறுதுணையாக இருந்ததாகவும், உழைப்பினை கொடுத்தால் அதற்கான பலன் கிடைக்குமென அடிக்கடி வலியுறுத்தி வந்ததாகவும், கூறினார்.