மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் பரிதாப மரணம் : தவிப்பில் குடும்பம்!!

1640

மட்டக்களப்பு- காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அக்சயன் , குடும்பத்தின் ஒரேயொரு பிள்ளை என தெரியவருகின்றது. காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயனும் ஒருவராவார்.

உயிரிழந்த மாணவர் அண்மையில் வெளியான G.C.E A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மாவட்டத்தில் 23 வது இடத்தில் மருத்துவ துறைக்கு தெரிவாகியிருந்தார்.

அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று அங்கு தரித்துவிட்டு வெள்ளிக்கிழமை (14) காலை வரும்பொழுது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடிய போது நீரில் மூழ்கி மரணமானார்.

உயிரிழந்த மாணவரின் உடல் லாகுகலை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மருத்துவ துறைக்கு தெரிவான எஸ்.அக்சயன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் காரைதீவு பிரதேசத்தை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.