
முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தென் தென்னாபிரிக்கா 1-0 என்று முன்னிலை பெற்றது.
ஸ்டெய்ன், மோர்கல் ஜோடியின் வேகத்தில் இலங்கை 216 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.
இது தென்னாபிரிக்க அணிக்கு இலங்கையில் பெற்ற 3வது டெஸ்ட் வெற்றியாகும். தென்னாபிரிக்க வெற்றிக்குக் குறுக்கே வழக்கம் போல் சங்கக்காரா நின்றார். ஆனால் அவர் 76 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
சங்கக்காராவிற்கு அடுத்து வந்த யாரும் நிலைத்து நிற்கவில்லை. ஜெயவர்தன(10 ஓட்டங்கள்), திரிமான(12), மத்யூஸ்(27), சந்திமால்(1), பெரேரா (0) என அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
தென்னாபிரிக்க அணியின் வேகபந்து வீச்சாளர் ஸ்டெய்ன் மற்றும் மோர்கல் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
ஸ்டெய்ன் இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். ஸ்டெய்ன், மோர்கல் இருவரும் இணைந்து 16 விக்கெட்டுகளை இந்தப் போட்டியில் கைப்பற்றினர்.





