
இலங்கை அணி வீரர் மஹெல ஜெயவர்த்தன நேற்று தனது 34வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெறுகிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இலங்கை அணி சார்பில் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் மஹெல ஜெயவர்த்தன சதத்தினைப் பெற்றுக் கொண்டார்.
மேலும் இலங்கை அணியின் பெரிதும் எதிர்பார்ப்புக்குறிய வீரரான குமார் சங்கக்கார ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் வந்த வேகத்திலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாபிரிக்க அணி முன்னதாக இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வசப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் முதலாவது டெஸ்டில் வெற்றி வாகை சூடி வலுவான நிலையில் உள்ளது.
இந்த நிலையில் தோல்வியைத் தவிர்த்து தொடரை சமப்படுத்த 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கை அணி இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளது.
அத்துடன் மஹெல ஜெயவர்த்தன, அடுத்ததாக பாகிஸ்தானுடன் இடம்பெறும் டெஸ்ட் தொடரோடு, டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்தப் போட்டி இலங்கை இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.





