![]()
![]()

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களுடன் தொடர்புடைய 18 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியா வளாகத்தின் வியாபார முகாமைத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவர்களே இந்த மோதல் சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வளாக முதல்வர் கதிரபிள்ளை கந்தசாமி அருள்வேல் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்டுள்ள 18 மாணவர்கள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் விசாரணைகளை மேற்கொண்டு அவர்கள் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் வளாக முதல்வர் குறிப்பிட்டார்.
இதேவேளை வவுனியா வளாகத்தில் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற மாணவர் மோதலை அடுத்து வியாபார முகாமைத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்த வியாபார முகாமைத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 4ஆம் திகதி மீள ஆரம்பிக்கவுள்ளதாக வளாக முதல்வர் கதிரபிள்ளை கந்தசாமி அருள்வேல் கூறினார்.
அதற்கமைய அடையாளம் காணப்பட்டுள்ள 18 பேர் தவிர்ந்த ஏனைய மாணவர்கள் தத்தமது விடுதிகளுக்கு சமூகமளிப்பதுடன், 4 ஆம் திகதி வகுப்புகளுக்கு வருகைதர வேண்டும் எனவும் வளாக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தின் வியாபார முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் கடந்த 28ஆம் திகதி மோதல் ஏற்பட்டது.
மோதலின் போது மூன்று மாணவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





