வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியை மீண்டும் பெறுவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முயற்சி!!

786

CVV

வவுனியா பூந்தோட்டத்தில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியை மீண்டும் பெறுவதற்கு எம்மாலான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண கூட்டுறவுத் திணைக்கள உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை (02.08) காலை 9.30 மணிக்கு கிறீன் கிறாஸ் விடுதியில் இடம்பெற்றது. இதில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரி 2009ம் ஆண்டு முதல் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு புனர்வாழ்வு முகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை மீண்டும் பெறுவதற்கு பல தடவை முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. இந்தக் கட்டடத்தை மீண்டும் பெற்று கூட்டுறவுத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம் என்றார்.

இதேவேளை இந்த பயிற்சிக் கல்லூரி இராணுவத்தின் வசம் உள்ளதால் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறிகள் அடிப்படை வசதிகளற்ற இடங்களில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.