வவுனியா நெளுக்குளம் சந்தியில் உள்ள இறுவட்டுகளை (CD) விற்பனை செய்யும் கடை ஒன்று நேற்றுமுன்தினம் (02.08) உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.
வவுனியா நெளுக்குளம் சந்தியில் உள்ள இறுவட்டுகளை விற்பனை செய்யும் கடை ஒன்றை நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் கடை உரிமையாளர் பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை 7 மணியளவில் வழமை போல் கடைக்குச் சென்று பார்த்தபோது கடை உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள மடிக்கணணி(Lap Top), கைத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-பாஸ்கரன் கதீசன்-





