
இந்திய -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 152 ஓட்டங்களுக்கு பரிதாபமாக அனைத்து விக்கட்டுகளையும் இழந்துள்ளது.
இந்திய அணியின் முதல் நான்கு விக்கட்டுகளும் 8 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டதுடன், டோனி மற்றும் அஸ்வின் ஓரளவு கைகொடுக்க இந்திய அணியால் 152 என்ற இலக்கை அடைய முடிந்தது.
இந்திய அணி சார்பாக டோனி 71 ஓட்டங்களையும், அஸ்வின் 40 ஓட்டங்களையும் ரஹானே 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இவர்கள் மூவரும் மட்டுமே இரட்டை இலக்கங்களில் ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய பிராட் 6 விக்கட்டுகளையும், அன்டர்சன் 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
மோசமான சாதனையை சமன் செய்த இந்திய அணி
இன்றைய போட்டியில் இந்திய அணி மோசமான துடுப்பாட்ட சாதனை ஒன்றை சமன்செய்தது. இந்திய அணியின் 6 துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டம் எதனையும் பெறாது (DUCK) ஆட்டமிழந்து இச் சாதனையை சமன் செய்தனர்.
இதற்கு முன்னர் பாகிஸ்தான், தென்னாபிரிக்க, பங்களாதேஷ் அணி வீரர்கள் 6 பேர் இன்னிங்ஸ் ஒன்றில் ஓட்டம் எதனையும் பெறாது ஆட்டமிழந்திருந்தனர். இச் சாதனைப் பட்டியலில் தற்போது இந்திய அணியும் இணைத்துள்ளது.





