
நயன்தாராவை சிம்பு, ஆர்யாவுடன் இணைத்து கிசு கிசுக்கள் பரவுகின்றன. சிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். பிறகு அது முறிந்தது. ராஜா ராணி படத்தில் நடித்த போது ஆர்யாவுடன் நயன்தாரா இணைத்து பேசப்பட்டார். நயன்தாராவை தனது வீட்டுக்கு அழைத்து ஆர்யா பிரியாணி விருந்து கொடுத்தும் அசத்தினார்.
இருவரும் நட்சத்திர ஹோட்டல்களில் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். இதன் மூலம் இருவரும் பழைய பகையை மறந்து காதலை புதுப்பித்துள்ளதாக செய்திகள் பரவியது. இதற்கு நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது..
என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. சிம்புவுடன் இணைத்து எழுதுகிறார்கள். ஆர்யாவை காதலிக்கிறேன் என்றும் பேசுகிறார்கள். இதில் துளியும் உண்மை இல்லை. நாங்கள் நடிகர்கள். தொழில் மீது ஈடுபாடு காட்டுகிறோம். ஒருவருக்கொருவர் நட்பாக பழகுகிறோம்.
இதை தவிர எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை. இது போன்ற கிசுகிசுக்களை சில நடிகர்கள் விரும்புகிறார்கள். சிலர் விரும்புவதில்லை. இந்தி நடிகர்கள் இப்படி வதந்திகள் பரவ வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு விளம்பரம் கிடைப்பதாக கருதுகின்றனர். தங்களை பற்றி கிசு கிசுக்கள் வரும் போது அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அதற்கு பதில் சொல்வதே இல்லை. தமிழ் திரையுலகிலும் இது போன்ற நிலைமை இருக்கிறது. ஆனால் தெலுங்கு நடிகர்கள் அப்படி இல்லை. கிசுகிசுக்கள் வரும் போது உடனடியாக அதற்கு மறுப்போ விளக்கமோ சொல்லி விடுகின்றனர் என்று நயன்தாரா கூறினார்.





