பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

432

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதன்படி கடந்த 6ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டரங்களில் ஆரம்பமான, இரு அணிகளுக்கும் இடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய யூனிஸ்கான் 177 ஓட்டங்களைக் குவித்தார். தொடர்ந்தும் அஷாட் ஷாபிக் (75), ஷர் பிராஸ் அஹமட் (55), அப்துர் ரஹ்மான் (50) ஆகியோரும் சிறப்பாக ஆடி ஓட்டங்களைக் குவிக்க பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் 451 ஓட்டங்களைக் குவித்து தனது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.

பந்து வீச்சில் தில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுக்களை சாய்க்க, ரங்கன ஹேரத் 3 விக்கெட்டுக்களையும், தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 221 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரது 10வது இரட்டைச் சதம் என்பதோடு, இந்தப் போட்டியில் 100 ஓட்டங்களைப் பெற்று சதமடித்த வேளை பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக சதங்களைப் பெற்ற இலங்கை வீரர் என்ற பெருமையும் அவர் வசமானது.

தொடர்ந்து அஞ்சலோ மத்தியூஸ் 91 ஓட்டங்களையும் குஷல் சில்வா 64 ஓட்டங்களையும், மஹெல ஜெயவர்த்தன 59 ஓட்டங்களையும் விளாசினர்.

இதன்படி நான்காம் நாளான நேற்று 9 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணி 533 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தத் தீர்மானித்தது.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் ஐந்தாம் நாளான இன்று 180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுக்களையும், தில்ருவான் பெரேஹரா 2 விக்கெட்டுக்களை சாய்த்தனர்.

இதேவேளை பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள மஹெல ஜெயவர்த்தனவுக்கு காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இறுதி டெஸ்ட் ஆட்டம் இதுவாகும்.

எனவே அவர் 99 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக துடுப்பெடுத்தாடினார். இதன்படி இலங்கை அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டார்.

காலி மைதானத்தில் மஹேல ஜெயவர்தன விளையாடும் கடைசிப் போட்டி இது என்பதால் அவருக்கு சிறப்பான பிரியாவிடை வழங்கப்பட்டதுடன் சிறப்பு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

SL01 SL1 SL