இறுதிப் போட்டியில் விளையாடும் ஜெயவர்த்தன : தொடரை வெற்றிபெற்று ஜெயவர்த்தனவை வழியனுப்ப தயாராகும் இலங்கை வீரர்கள்!!

584

Mahela

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை, பாகிஸ்தானை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் இலங்கை அணியின் அணித்தலைவராக சில ஆண்டுகள் பணியாற்றி இருக்கும் மஹேல ஜெயவர்த்தன, பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்பில் நாளை தொடங்கும் 2வது டெஸ்டுடன் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

17 ஆண்டுகள் இலங்கை அணிக்காக சிறந்த பங்களிப்பை அளித்த அவரை வழியனுப்பி வைக்க இலங்கை கிரிக்கெட் சபை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

1997ம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் தனது 20வது வயதில் அறிமுகம் ஆன ஜெயவர்த்தன, சொந்த மண்ணிலேயே தனது டெஸ்ட் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்.

இதில் இன்னொரு விசேடம் என்னவென்றால் இதே ஓகஸ்ட் 14-18ம் திகதி தான் (1948ம் ஆண்டில்) கிரிக்கெட்டின் பிதாமகன் அவுஸ்திரேலியாவின் டொன் பிரட்மன் டெஸ்டில் விளையாடிய கடைசி நாட்கள் ஆகும்.

ஜெயவர்த்தன 148 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 சதத்துடன் 11,756 ஓட்டங்களும், 420 ஒரு நாள் போட்டிகளில் 16 சதத்துடன் 11,681 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), ரிக்கிபொண்டிங், கலிஸ், சங்கக்கார ஆகியோர் வரிசையில், ஒரு நாள் போட்டி, டெஸ்ட் ஆகிய இரண்டு வகை கிரிக்கெட்டிலும் 11 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ள 5வது வீரர் ஜெயவர்த்தன ஆவார்.

ஓய்வு பற்றி ஜெயவர்த்தனே கூறுகையில், ‘அணியில் இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மத்யூசும், அணித்தலைவர் பணியில் தன்னை வலுவாக நிலை நிறுத்திக் கொண்டு விட்டார்.

எனவே அணியில் எனது பணி நிறைவடைந்து விட்டது. இலங்கை அணிக்காக 17 ஆண்டுகள் விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். ஓய்வு முடிவை எளிதாக எடுத்து விடவில்லை. ஆனால் விலகுவதற்கு இதுவே சரியான நேரமாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.