கடந்த 24 மணித்தியாலங்களில் வீதி விபத்துக்களால் நால்வர் பலி!!

484

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை, மட்டக்களப்பு, மாத்தளை, அநுராதபுரம் ஆகிய பகுதிகளிலேயே இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, கேகாலை – பெரகலை வீதியில் மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 53 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 85 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளையில் வேக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 60 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் கெக்கிராவை பகுதியில் கண்டியிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 49 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.