பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : மனைவி பலி, கணவன் படுகாயம்!!

1025

கொழும்பு – காலி பிரதான வீதியில் எலகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவன் படுகாயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.06) காலை இடம்பெற்றுள்ளது.

பேருவளையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்திருந்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் செலுத்துனரான கணவன் படுகாயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மஹவில, ஹபுருகல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஆவார். இதனையடுத்து பஸ் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.