
உடலின் எடையை குறைப்பதற்கு மருந்து மாத்திரைகள் கிடையாது என பிளாஸ்க் சத்திரசிகிச்சை நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் துலிப் பெரேரா தெரிவித்துள்ளார். உடலின் எடையைக் குறைத்துக் கொள்வதற்காக இதுவரையில் எவ்விதமான மருந்துகளோ மாத்திரைகளோ கண்டு பிடிக்கப்படவில்லை.
உடல் எடையை குறைப்பது தொடர்பில் விளம்பரம் செய்யப்படும் போலி வழிகளைக் கண்டு ஏமாற்றமடைய வேண்டாம். உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சி, மருத்துவ ஆலோசனை என்பனவற்றின் மூலமே உடல் எடையைக் குறைத்துக் கொள்ள முடியும்.
உடல் எடையை குறைப்பதாகவும், உடல் அழகை மெருகூட்டுவதாகவும் கூறி செய்யப்படும் போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு போலி விளம்பரங்களைச் செய்து மக்களை ஏமாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு எதிராக சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென டொக்டர் பெரேரா கோரியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.





