125 ஆண்டு கிரிக்கெட் சாதனையை முறியடித்த ரங்கன ஹேரத்!!

483

Sri Lanka's Rangana Herath celebrates a Bangladesh wicket

பாகிஸ்தான் அணிக்கெதிராக 9 விக்கெட்டுகள் கைப்பற்றியது மூலம் ரங்கன ஹேரத் இங்கிலாந்து அணியின் ஜொனி பிரிக்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

கொழும்பில் பாகிஸ்தான் அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை விளையாடி வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கை இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 33.1 ஓவர்களில் 127 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதன் மூலம் இடது கை பந்துவீச்சாளர்களில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றார் ரங்கன ஹேரத்.

இதற்கு முன்பு 1889ம் ஆண்டு இங்கிலாந்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜொனி பிரிக்ஸ் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 11 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் உலக சாதனையாக இருந்தது.

இதைத் தொடர்ந்து ஜொனி பிரிக்ஸ் தன் வசம் வைத்திருந்த 125 ஆண்டு கால சாதனையை ரங்கன ஹேரத் முறியடித்தார்.

இது மட்டுமல்லாது பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கையின் பந்துவீச்சாளர் என்ற பெருமையை முரளிதரனிடம் இருந்து (16 டெஸ்டில் 80 விக்கெட்) ஹேரத் தட்டிப்பறித்துள்ளார்.

ரங்கன ஹேரத் இந்த அணிக்கு எதிராக இதுவரை 17 டெஸ்டில் விளையாடி 83 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். சுழற்பந்து வீச்சு ஜம்பவான் முரளிதரனுக்கு பிறகு (2 முறை 1998ம் ஆண்டு மற்றும் 2002ம் ஆண்டுகளில்) இன்னிங்ஸில் 9 விக்கெட் கைப்பற்றிய 2வது இலங்கை பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் ஹேரத் பெற்றார்.

137 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தப்படுவது இது 18வது நிகழ்வாகும். இதில் இங்கிலாந்தின் ஜிம் லாகெர், இந்தியாவின் அனில் கும்ளே ஆகியோர் இன்னிங்ஸில் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அடங்கும்.