600 அடி பள்ளத்தாக்கு எரிமலையில் விழுந்து இறந்த பிரபலத்தின் உடல் 4 நாட்களுக்குப் பின்னர் மீட்பு!!

537

எரிமலையில் இருந்து ராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் தவறி விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஜூலியானா உயிரிழந்த நிலையில், அவரது உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ஜூலியானா மரின்ஸ் (26). இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் வெளிநாடுகளுக்கு சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை சுமார் 3½ லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜூலியானா இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றார். தொடர்ந்து அங்குள்ள 3,500 மீட்டர் உயரம் கொண்ட எரிமலை சிகரமான ரின்ஜானிக்கு கடந்த 22ம் தேதி சாகச குழுவினர் மலையேற்ற சாகசத்தில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக எரிமலையில் இருந்து ராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் தவறி விழுந்தார். இது குறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றனர்.

டிரோன் மூலமாக அவர் இருக்கும் இடத்தை கண்காணித்தனர். அப்போது மண்ணில் சிக்கி அவர் உயிருக்கு போராடி வந்தது தெரிந்தது. தொடர்ந்து கயிறு கட்டி கீழே இறங்கி மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால் அவர் 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து மீட்பு பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில், ஜூலியானா உடலை 4 நாட்களுக்கு பிறகு மீட்டு மேலே கொண்டு வரப்பட்டது.