
இலங்கையில் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள தேசிய அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அரச வைத்தியசாலைகளில் அனுமதி பெற்றுக்கொள்வோர் தங்களது தேசிய அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்க் பிராந்திய வலய நாடுகளில் வாழும் மக்களின் ஒரே விதமான தோற்றத்தைக் கொண்டுள்ளனர். வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இவ்வாறு சார்க் பிராந்திய வலய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இலங்கை வைத்தியசாலை நலன்களை சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டிய நலன்களை வேறும் நாடுகளின் மக்கள் அனுபவிக்கின்றனர். லட்சக் கணக்கான ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சைளை இலவசமாக பெற்றுக்கொண்டுள்ளனர்.
சில வெளிநாட்டுப் பிரஜைகள் ஒரு மாதம் வரையில் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த மோசடியுடன் தொடர்புடையவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடமாட்டேன்.
வெளிநபர்கள் உள்நாட்டு மருத்துவ சேவையின் நன்மைகள் அனுபவிப்பதனை தடுக்கும் நோக்கில் எதிர்காலத்தில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அனைவரும் தங்களது தேசிய அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள தேசிய அடையாள அட்டை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் இந்த விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.





