இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் சித்தரவதையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு வன்னி பிராந்திய பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கான செயலமர்வு வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (03.07.2025) காலை முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் (பதில்) தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் வைத்தியர் ஜிகான் குணதிலக வளவாளராக கலந்து கொண்டு,
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளான, “நபர் ஒருவர் காவல்துறை காவலில் இருக்கும்போதும், காவல்துறையினருடனான கருத்து முரண்பாடுகளின் போதும் ஏற்படும் மரணங்களைத் தடுப்பது குறித்தும்,
இலங்கை காவல்துறைக்கு அனுப்பப்பட்ட 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரை “மற்றும்
“மனித உரிமைகள் பாதுகாவலர்களின் பாதுகாப்பு குறித்தான 2024 ஆண்டின் 01 இலக்க பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரை” போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.